மியான்மரில் இராணுவ எச்சரிக்கையை மீறி வலுக்கும் மக்கள் போராட்டம்!
இன்னும் பல உயிர்கள் பலியாகக்கூடும் என இராணுவம் எச்சரித்தப் பிறகும், இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மியான்மரின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மியானமரில் பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டுள்ள அரசு தலைவர் ஆங் சான் சூகி மற்றும் பிற அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் போது மக்கள் கடந்த 3 வாரங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள்ளனர்.
போராட்டங்களிலிருந்து பொதுமக்களை கலைக்க இராணுவம், தண்ணீர் பீரங்கி பாய்ச்சுதல், புகை குண்டுகளை வீசுதல் போன்ற பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதற்கும் மேலாக கடந்த வாரத் தொடக்கத்தில் ரப்பர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய பொலிஸ், நேற்று நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 3 போராட்டக்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், இனி எடுக்கப்படும் நடவடிக்கைளுக்கு பல உயிர்கள் பலியாகக்கூடும் என இராணுவ அதிகாரம் நேற்று எச்சரித்தது.
இருப்பினும் இன்று தலைநகர் Naypyitaw, Yangon, Mandalay உள்ளிட்ட மியான்மரின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வேலை மற்றும் தொழில்களுக்கு முடக்கு போட்டுவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் இராணுவ அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
இதுவரை முன்னாள் அரசு அதிகாரிகள், பிரபலங்கள் உட்பட சுமார் 640க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்கார்களை இராணுவம் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.