மகனை சங்கிலியால் கட்டிவைத்துள்ள பெற்றோர்! போதையின் பிடியிலிருந்து காக்க போராட்டம்...
பஞ்சாபில் போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற போராடம் பெற்றோர் 23 வயது மகனை காலில் சங்கிலி போட்டு கட்டிவைத்துள்ளனர்.
இந்திய மாநிலம் பஞ்சாபில் 23 வயது இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருக்கும் கட்டிலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வெளியில் சென்று போதைப்பொருள் உட்கொள்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கட்டுப் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவரது பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த இளைஞர் தினமும் ரூ.800 மதிப்புள்ள போதை மருந்துகளை எடுத்துக்கொள்வார் என்றும் கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளாக அவர் இதைச் செய்து வருகிறார் என்றும் அவரது தாயார் கூறுகிறார்.
மோகா மாவட்டத்தில் உள்ள எளிய குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான இவர், தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். "அவன் தன் பணத்தையெல்லாம் போதைப்பொருளுக்கு வீணடிப்பான்" என்று தாய் புலம்புகிறார்.
பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு, வீட்டில் உள்ள பொருட்களைத் திருடத் தொடங்கியுள்ளார். சில சமயங்களில் வீட்டுப் பொருட்களைத் திருடி போதைப்பொருளுக்கு விற்பார். பணத்தைப் பெற முடியாவிட்டால் தங்களை உடல் ரீதியாகவும் தாக்குவார் என்று அவரது தார் கூறுகிறார்.
போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எட்டு நாட்களாகிறது. அவருடைய போதை அடிமைத்தனத்தால் விரக்தியடைந்த குடும்பம், எல்லாவற்றையும் பூட்டி வைக்கிறது.
"அவர் எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறார், நாங்கள் எல்லாவற்றையும் பூட்டியே வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் தீவனம் எடுக்க எனக்கு உதவுவதற்காக நான் அவரது சங்கிலிகளை அவிழ்த்து விடுவேன்" என்று அவரது தாய் கூறினார்.
தனது கிராமத்தில் போதைப்பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டிய அவர், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபடுவது வழக்கமாக உள்ளது.