முதுமையை தடுக்க 26 பில்லியன் டொலரில் புடினின் திட்டம்
முதுமையை தடுத்து மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் திட்டம் தொடர்பான ஆய்வை நீண்ட காலமாகவே ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ரஷ்யா அரசாங்கமும் இது தொடர்பான ஆய்வை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
முதுமையை தடுக்க 26 பில்லியன் டொலரில் திட்டம்
முன்னதாக, நவீன மருத்துவத்தால் உறுப்புகளை மாற்றி மனிதர்களை என்றும் இளமையாகவும், அழியாமலும் மாற்ற முடியும் என சீன ஜனாதிபதியுடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் பேசியது விவாதமானது.

தற்போது 26 பில்லியன் டொலர் மதிப்பிலான மனித வாழ்நாளை நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்ட உயிர்மருத்துவ ஆராய்ச்சிக்கு புடின் அரசு ஆதரவளித்துள்ளது.
இந்த முன்னெடுப்பை, புதினின் மகளும் நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணருமான மரியா வொரொன்ட்சோவா மற்றும் இயற்பியலாளர் மிகைல் கோவல்சுக் ஆகியோர் மேற்பார்வையிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் 3D தொழில்நுட்பம் மூலம் மனித திசுக்கள் மற்றும் குருத்தெலும்புகளை ஆய்வகங்களில் அச்சிடப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மனித மரபணுக்களுடன் ஒத்துப்போகும் சிறிய பன்றிகளில் மனித உறுப்புகளை வளர்த்து அதனை பின்னர் மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் இதனை மனிதர்களுக்கு பொருத்துவதை இலக்காக வைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதுமையை தடுத்து ரஷ்யாவை நீண்ட காலமாக ஆட்சி செய்ய விரும்பும் புடின் ஏற்கனவே அது தொடர்பான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
உடலில் உள்ள பழைய செல்களை அழித்து, முதுமையாவதை தடுக்கும் வகையில் -170 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான மிகக் கடுமையான உறைபனி குளிரூட்டப்பட்ட அறைகளில் (Cryochamber) ஆடைகளின்றி ‘பனிக்குளியல்’ எடுக்கும் கிரையோதெரபி சிகிச்சையை 73 வயதான புடின் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் கிரெம்ளினில் நடந்த ஒரு சந்திப்பின்போது புதின் அந்த சிகிச்சையை எவ்வளவு ஆர்வத்துடன் பரிந்துரைத்தார் என்பதை முன்னாள் ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் ஒருமுறை நினைவு கூர்ந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |