தனக்கு நெருக்கமானவர்களை சந்தேகிக்கத் துவங்கியுள்ள புடின்: அடிக்கடி கோப்படுகிறாராம்
ரஷ்ய அதிபர் புடின், தனக்கு நெருக்கமான ஆலோசகர்கள் வட்டத்திலேயே கருப்பு ஆடுகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடத்துவங்கியுள்ளார்.
தனது இராணுவ திட்டங்கள் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு லீக் ஆன விடயம் தெரியவந்துள்ளதால் அவர் கோபமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது இராணுவத் திட்டங்கள் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு லீக் ஆகி, அதை அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரைனுக்குத் தெரியப்படுத்துவதால்தான், உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய தளபதிகள் மற்றும் முக்கிய படைத் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுவதாக புடின் கருதுகிறார்.
குறிப்பாக, உக்ரைன் ஊடுருவலுக்குப் பொறுப்பான தனது பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu (66)தான் ஒருவேளை கருப்பு ஆடோ என சந்தேகப்படத் துவங்கியுள்ளாராம் புடின்.
அதற்கேற்றாற்போல, கொஞ்ச நாட்களாக Shoigu வெளியே தலை காட்டவும் இல்லை. இன்னொரு பக்கமோ, Shoiguவின் மகளான Ksenia (31) உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தானும் தன் மகளுமாக மஞ்சள் மற்றும் நீல வண்ணங்களில் உடை உடுத்திக்கொண்டு சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார்.
மேலும், புடினைக் கொன்றுவிட்டு அவருக்கு பதிலாக அவரது முன்னாள் சக உளவாளியான Alexander Bortnikovஐ அதிபர் பதவியில் அமர்த்த செல்வாக்கு மிக்க சிலரைக் கொண்ட ஒரு குழு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாக, அவரையும் ஓரங்கட்டத் துவங்கிவிட்டாராம் புடின்.
ஆக, தன் உளவுத்துறை மோசமாக இருப்பதாலும், உக்ரைனில் தனது படைகள் மோசமாக செயல்படுவதாலும், உக்ரைனை ஊடுருவுவதற்கு முன்பே அமெரிக்க உளவுத்துறை அதைக் குறித்து அறிந்துகொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாலும், யாரோ அமெரிக்காவுக்கு துப்புக் கொடுப்பதாலும், நடக்கப்போகும் பல விடயங்கள் குறித்து அமெரிக்கர்கள் முன்கூட்டியே அறிந்துகொள்வதாலும், இப்போதெல்லாம் அடிக்கடி கோபப்படுகிறாராம் புடின்.