சிறார் மருத்துவமனையை தரைமட்டமாக்கிய ரஷ்யா... குடும்ப உறவுகளுக்காக பேசிய புடின்
ரஷ்யாவில் குடும்ப உறவுகளின் மதிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசிய புடின், உக்ரைனில் சிறார் மருத்துவமனை ஒன்றின் மீது கொடூரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
ரஷ்யாவில் குடும்ப உறவுகள்
மாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விளாடிமிர் புடின், நாட்டில் குடும்ப உறவுகள் ஊக்குவிக்கப்படுவது குறித்தும் அதன் தேவை தொடர்பிலும் பெருமையாக பேசியுள்ளார்.
வலிமையான ரஷ்யா என்ற சர்வதேச கண்காட்சி ஒன்று மாஸ்கோவில் முன்னெடுக்கப்படுகிறது. இதில் ரஷ்ய வணிகங்கள், தொழில்கள் மற்றும் பிராந்தியங்களின் சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
அத்துடன் பல்வேறு போட்டிகளும் முன்னெடுக்கப்படுகிறது. மட்டுமின்றி, வலிமையான ரஷ்யா என்பதில் குடும்ப உறவுகள் தொடர்பிலும், அதன் மதிப்புகளை ஊக்குவிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திங்களன்று குடும்ப உறவுகளை ஊக்குவிப்பது தொடர்பான நிகழ்ச்சியில் விளாடிமிர் புடின் கலந்துகொண்டுள்ளார். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சில மணி நேரம் முன்னர் தான் உக்ரைனில் சிறார் மருத்துவமனை ஒன்றை ரஷ்ய ராணுவம் குண்டுவீச்சில் தரைமட்டமாக்கியுள்ளது.
ரஷ்யா பதிலளிக்க வேண்டும்
குறைந்தது 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் முழுக்க திங்களன்று 37 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே, கீவ் நகர மேயர் தெரிவிக்கையில், ரஷ்யாவின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 16 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றும், நாடு முழுவதும் நடந்த தாக்குதலில் சிக்கி 37 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில் திங்களன்று மட்டும் 5 நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்றார்.
மேலும், அப்பாவி பொதுமக்கள், சிறார்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் ரஷ்யா பதிலளிக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |