ஜான் எஃப் கென்னடிக்கு ஏற்பட்ட அதே நிலை ட்ரம்புக்கும்... புடினின் நண்பர் விடுத்த மிரட்டல்
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர முயன்றால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடிக்கு ஏற்பட்ட நிலை ட்ரம்புக்கும் ஏற்படும் என புடினின் நண்பரும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியுமான டிமித்ரி மெத்வெதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடுங்க வைக்கும் மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி வாய்ப்பை பெறுவாரா என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே, நடுங்க வைக்கும் மிரட்டலை டிமித்ரி மெத்வெதேவ் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, இருமுறை ட்ரம்ப் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், டிமித்ரி மெத்வெதேவ் விடுத்துள்ள மிரட்டல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மூன்றாவது ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ள டிமித்ரி மெத்வெதேவ், 2012 முதல் 2020 வரையில் ரஷ்யாவின் பிரதமராகவும் பதவியில் இருந்துள்ளார். விளாடிமிர் புடின் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த 2020 முதல் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக பதவியில் உள்ளார்.
இந்த நிலையில், ஞாயிறன்று பேசிய டிமித்ரி மெத்வெதேவ், ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் 1963ல் ஜான் எஃப் கென்னடிக்கு ஏற்பட்ட அதே கதியை ட்ரம்ப் சந்திக்க நேரிடும் என்றார்.
படுகொலை செய்யப்பட்ட நிலை
மேலும், ட்ரம்பால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது. அது மூன்று நாட்கள் அல்ல மூன்று மாதங்கள் ஆனாலும் ட்ரம்பால் அது சாத்தியமாகாது என்றார்.
ஆனால், வீம்புக்கு போரை முடிவுக்கு கொண்டுவர அவர் முயன்றால், ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டது போன்ற நிலை அவருக்கும் ஏற்படும் என்றார்.
ட்ரம்பை மட்டுமல்ல, கமலா ஹாரிஸையும் கடுமையாக விமர்சித்துள்ள டிமித்ரி மெத்வெதேவ், தம்மை சுற்றியுள்ள அனைவரையும் பயத்துடனே அணுகும், ஒரு முட்டாள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பொறுப்புக்கு வருகிறார் என்பது வேடிக்கை என்றும் கிண்டலடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |