போர் நிறுத்தம் வேண்டுமா? எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்! டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை
போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலையான அமைதி ஒப்பந்தம்
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தை நிலையான முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மிகப்பெரிய சக்தி, உக்ரைன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்தார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதள பக்கத்தில், பெரும்பாலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலைப்பது இல்லை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, நிலையான அமைதி ஒப்பந்தமே சிறந்தது என அனைத்து தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தை விட்டுத் தர வேண்டும்
பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாடிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு மாற்றாக உக்ரைன் தங்களின் நிலப்பரப்பு சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உரையாடல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் வழங்கிய தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் டொனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தை விட்டுத்தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் முன்மொழிந்து இருப்பதாக தெரிகிறது.
ஆனால் இந்த முன்மொழிவை உக்ரைனிய ஜனாதிபதி முழுவதுமாக நிராகரித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்தித்து பேசவுள்ளார்.
ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கோருவது உக்ரைனை வேதனையில் தள்ளியுள்ளது.
2024ம் ஆண்டு இந்த பிராந்தியத்திற்கு நுழைந்த ரஷ்ய படைகள் ஏற்கனவே டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கால் பங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |