பேரிழப்பை எதிர்கொண்டிருக்கும் ரஷ்யா... நடுங்கவைக்கும் எண்ணிக்கை
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கை 840,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து
உக்ரைன் மீதான படையெடுப்பை வெறும் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே தற்போதும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டு வருகிறார்.
உக்ரைனின் ஆயுதப் படைகளின் புதிய புள்ளிவிவரங்களின்படி, போர் தொடங்கியதிலிருந்து 840,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது என்றும், இன்னொரு 2 மில்லியன் வீரர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள விளாடிமிர் புடின், 2020 ஜனாதிபதி தேர்தல் ட்ரம்பிடம் இருந்து களவாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் வெற்றி உக்ரைன் மீதான போரை தடுத்திருக்கும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லாத நிலையிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக ட்ரம்பும் தமது வெற்றி களவாடப்பட்டது என்றே கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் போர்க்களத்தில் பேரிழப்பை புடின் சந்தித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் களமிறங்கியுள்ள வடகொரிய வீரர்களில் 1,000 பேர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு போரில் உதவும் பொருட்டு வடகொரியாவின் கிம் ஜோங் உன் 11,000 வீரர்களை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஓராண்டுக்குள் 100,000 வீரர்கள்
ஆனால் வடகொரிய படைகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், பாதிப்பு எண்ணிக்கை 4,000 தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி நடுப்பகுதிக்குள் சுமார் 1,000 வடகொரிய வீரர்கள் இறந்துவிட்டதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, அத்துடன் அவர்கள் எங்கே மாற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை.
அமெரிக்கா, உக்ரைன் மற்றும் தென் கொரியாவில் உள்ள அதிகாரிகள் தரப்பு குறிப்பிடுகையில், ரஷ்யாவிற்கு உதவ வட கொரியா ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், சுமார் 12,000 வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் வட கொரிய வீரர்களின் எண்ணிக்கை 15,000 ஐ எட்டக்கூடும் என்று தென் கொரியாவிற்கான உக்ரைன் தூதர் கூறியுள்ளார்.
அதாவது, ரஷ்யா மற்றும் வடகொரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஓராண்டுக்குள் 100,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் களமிறக்கப்படுவார்கள் என்றே Dmytro Ponomarenko என்பவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |