புடினுக்கு எஞ்சியிருப்பது இரண்டு ஆண்டுகள் மட்டுமே... உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர்
Putin has two years left to fight: புடினுக்குப் போராடுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
விளாடிமிர் புடினும் ரஷ்யாவும் போரிடுவதற்கு அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன என உக்ரைனின் உயர்மட்ட உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

படைவீரர்களின் இழப்பு, சரிந்து வரும் மன உறுதி மற்றும் தடுமாறும் பொருளாதாரம் ஆகியவை 2028-ஆம் ஆண்டிற்குள் ரஷ்யாவின் போர் புரியும் திறனைப் பாதிக்கக்கூடும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஒலெக் இவாஷ்செங்கோ விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா ஒவ்வொரு மாதமும் புதிதாகச் சேர்க்கும் வீரர்களின் எண்ணிக்கையை விட, 6,000-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து வருவதாக மேற்கத்திய உளவுத்துறைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா 15 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை இழந்துள்ளதாகவும், அவர்களில் 450,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மதிப்பிடுகின்றன.
கீவ் நகரில் உள்ள உக்ரேனிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைமையகத்தில் பேசிய இவாஷ்செங்கோ, அடுத்த ஓராண்டுக்குத் தேவையான ராணுவ மற்றும் பொருளாதார வளங்கள் ரஷ்யாவிடம் உள்ளன; ஆனால், அவை 2028-இல் தீர்ந்துவிடும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என டைம் இதழிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தினமும் சுமார் 1,000 பேரையும், சில சமயங்களில் 1,200 பேரையும் படையில் சேர்க்கிறது; ஆனால், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையைப் பாருங்கள். நேற்று 1,410 பேர், அதற்கு முந்தைய நாள் 1,511 பேர் என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் போர்க்களத்தில் கொல்லப்படுகிறார்கள். மேலும் 18 மாதங்களுக்குச் சண்டை தொடர்ந்தால், ரஷ்யத் தரப்பில் கூடுதலாக 7,65,800 பேர் பாதிக்கப்படக்கூடும் என்றும், அவர்களில் 4,59,480 பேர் உயிரிழக்கவும் 3,06,320 பேர் காயமடையவும் வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் எல்லைக்கு அப்பால் உள்ள மாஸ்கோவில் போர் முயற்சிகளுக்கான ஆர்வமின்மையை ஏற்படுத்தியுள்ளன என்று இவாஷ்சென்கோ குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யர்கள் யாருக்கும் சண்டையிட விருப்பம் இல்லாததால் மன உறுதி மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ரஷ்ய பொதுமக்களின் மன உறுதியும் சரிந்துள்ளது; பெரும்பாலான மக்களுக்கு உண்மையில் போர் வேண்டாம் என்றே கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில் போரைத் தொடர்வதற்காக, புடினை இயல்புக்கு மாறானவர் என்று இவாஷ்செங்கோ குறிப்பிட்டுள்ளார். பிறரின் நிலப்பகுதியைக் கைப்பற்றுவதற்காக அவர்களைக் கொல்ல விரும்பும் ஒருவரைப் பற்றி நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தில் பாவ்லோஹ்ராட் (Pavlohrad) நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றை ரஷ்ய ட்ரோன் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இவாஷ்செங்கோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |