உக்ரைன் படுகொலை முயற்சி... நூலிழையில் தப்பிய ரஷ்ய ஜனாதிபதி: வெளிவரும் பகீர் பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் கொலை முயற்சிக்கு இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகொப்டர் பாதையில்
இது தொடர்பில் ரஷ்ய இராணுவ அதிகாரியே விளக்கம் அளித்துள்ளார். மே 20 அன்று குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதான தாக்குதலில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் புடினின் ஹெலிகொப்டர் பாதையில் இருந்தது என்றே அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ட்ரோனை இடைமறித்து, அது ஜனாதிபதியின் விமானப் பாதையை அடைவதற்கு முன்பே அழித்துவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 20 முதல் 22 வரை, ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்தது, நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 1,170 ட்ரோன்களை அழித்தது என்று ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் பிரிவின் தளபதி யூரி டாஷ்கின் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 20 அன்று குர்ஸ்க் பகுதிக்கு புடின் விஜயம் செய்தபோது, உக்ரைனில் இருந்து திடீரென்று வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் 46 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் கூறினார்.
மட்டுமின்றி, குர்ஸ்க் பிராந்தியத்தில் புடின் பயணித்த ஹெலிகொப்டரை இலக்காக கொண்டு உக்கிர தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்தது என்பதை தம்மால் உறுதியாக கூற முடியும் என்றும் தளபதி யூரி டாஷ்கின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தரப்பிற்கு கலக்கம்
புடினின் ஹெலிகாப்டரின் பறக்கும் பாதையை நெருங்கி வந்த ட்ரோன் கண்டறியப்பட்டதாகவும், உடனடியாக ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகளால் அது செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் புடின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு விஜயம் செய்திருந்தார், மார்ச் மாதத்திற்குப் பிறகு அந்தப் பகுதிக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
இருப்பினும், இந்த சம்பவம் உக்ரைனிய ட்ரோன் படைகளின் திறன்கள் குறித்து ரஷ்ய தரப்பிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலானது ஒரு படுகொலை முயற்சியா அல்லது உக்ரைனின் விரிவான உளவியல் நடவடிக்கையா என்பதை ரஷ்ய அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |