மொத்த ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் எரிவாயுவையும் நிறுத்த புடின் திட்டம்: வெளியாகியுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்
ஜேர்மனி முதலான சில நாடுகளுக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவை ரஷ்யா வெகுவாகக் குறைத்துவிட்டது.
தற்போது மொத்த ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் எரிவாயுவையும் நிறுத்த புடின் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, ஜேர்மனி, இத்தாலி, பெலாரஸ், துருக்கி, நெதர்லாந்து முதலான பல நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், திடீரென ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் அந்நாட்டின்மீது தடைகள் விதித்தன.
அதனால் ஆத்திரமடைந்த புடின், பல்வேறு காரணங்களைக் கூறி ஜேர்மனி முதலான நாடுகளுக்கு அனுப்பிவந்த எரிவாயுவின் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டார்.
புடின் எரிவாயுவை வைத்து மிரட்டுவதாக, அரசியல் செய்வதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருந்தாலும், அவர் சற்றும் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், தற்போது மொத்த ஐரோப்பாவுக்கும் அனுப்பப்படும் எரிவாயுவையும் புடின் நிறுத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காரணம், ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டின் தாக்கம் பல நாடுகளில் விலைவாசி உயர்வு முதலான பல பிரச்சினைகளை உருவாக்கத் துவங்கிவிட்டது.
குளிர்காலம் வேறு நெருங்கிவருவதால், ரஷ்யா எரிவாயுவை நிறுத்திவிட்டால், குளிர்காலத்தில் எப்படி வீட்டை வெப்பப்படுத்த எரிவாயு இல்லாமல் குளிரை சமாளிப்பது என மக்கள் அஞ்சத் துவங்கிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட சுழலில்தான், ரஷ்யா மொத்த ஐரோப்பாவுக்கும் அனுப்படும் எரிவாயுவையும் நிறுத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
உலக நாடுகளில் ஆற்றல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனமான Fitch என்ற நிறுவனம்தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அப்படி ரஷ்யா மொத்த ஐரோப்பாவுக்குமான எரிவாயு வழங்கலை நிறுத்துமானால், ஐரோப்பாவின் பெரும்பகுதி பொருளாதார மந்தநிலையை சந்திக்க நேரிடும் என்பதால் ஐரோப்பிய நாடுகள் ஆற்றலுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.