உலக நாடுகள் அஞ்சும் ரஷ்யாவின் மிக ரகசியமான இந்த ஆயுதம்... எவரும் தொடத் தயங்குவதன் காரணம்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிடமிருந்து கடுமையான இராணுவ மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட போதிலும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து வலுவாகப் போராடி வருகிறது.
டூம்ஸ்டே வானொலி நிலையம்
மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதங்கள், உதவி மற்றும் சர்வதேச ஆதரவை வழங்கி வந்தாலும் ரஷ்யா இதுவரை பின்வாங்கவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் ரஷ்யாவின் வலுவான நிலைப்பாட்டிற்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணம், அதன் மேம்பட்ட ஆயுதங்களின் பெருமளவிலான இருப்பு ஆகும்.
ரஷ்யா உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் குவித்து வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாகும். ஆனால் அரிதாகப் பேசப்படும் மற்றொரு ஆயுதம் ரஷ்யா வசம் உள்ளது, அது டூம்ஸ்டே வானொலி நிலையம்.
நிபுணர்களால் UVB-76 என அழைக்கப்படும் இந்த ஆயுதம் அல்லது மர்மமான ரேடியோ சிக்னல் பல தசாப்தங்களாக கேட்போரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வழக்கமான வானொலியைப் போல இல்லை. மாறாக, எண்கள் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்தி விசித்திரமான, குறியிடப்பட்ட செய்திகளை அனுப்புகிறது.
இந்தச் செய்திகளை ஹேக் செய்ய முடியாது, மேலும் செயற்கைக்கோள்களால் கூட அடைய முடியாத இடங்களுக்கு அனுப்ப முடியும். இந்த சமிக்ஞைகளின் அர்த்தம் சாதாரண மக்களுக்குத் தெளிவாக புரிவதில்லை. ஆனால் ரஷ்ய இராணுவம் மற்றும் அரசாங்கத்தில் உள்ள குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்கிறார்கள்.
உளவியல் ஆயுதம்
சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டூம்ஸ்டே வானொலி நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவசரகால சூழ்நிலைகளில், குறிப்பாக போரின் போது, UVB-76 முக்கிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உக்ரைன் போரின் முக்கிய தருணங்களில் விசித்திரமான குரல் செய்திகள் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்வுகள் நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலையத்தின் ஒலி அல்லது செய்தியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பெரும்பாலும் உக்ரைன் போரில் கடுமையான முன்னேற்றங்களின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இது வெறும் தகவல் தொடர்பு கருவியாக மட்டுமல்லாமல், உளவியல் ஆயுதமாகவும் ரஷ்யாவால் மிக நுட்பமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |