சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை புறக்கணிக்கும் சட்டம்..கையெழுத்திட்ட புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்றங்களின் குற்றவியல் தீர்ப்புகளைப் புறக்கணிக்க ரஷ்யாவை அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்தது.
உக்ரேனியக் குழந்தைகளை ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக நாடு கடத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்கு அவரும், அவரது குழந்தைகளின் உரிமைகள் ஆணையரும் பொறுப்பு என்று அது குற்றம் சாட்டியது.
ஆனால் அதனை ஏற்காத ரஷ்யா, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
ரஷ்யா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய ரோம் சட்டத்தில் கையெழுத்தை அங்கீகரிக்கவில்லை. பின்னர் தனது கையொப்பத்தை அது விலக்கிக் கொண்டது.
புதிய திருத்தத்தின் கீழ்
இந்த நிலையில், திங்களன்று புடின் புதிய திருத்தத்தின் கீழ் கையெழுத்திட்டார். அதன்படி, வெளிநாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்றங்களின் குற்றவியல் தீர்ப்புகளைப் புறக்கணிக்க ரஷ்யா அனுமதிக்கப்படும்.
இதன்மூலம் உக்ரைன் போர் தொடர்பான ஒரு தீர்ப்பாயத்தின் எதிர்காலத் தீர்ப்புகள் எதற்கும் இணங்க ரஷ்யா திட்டமிடவில்லை என்ற தெளிவான சமிக்ஞை புலப்படுகிறது.
ரஷ்ய நீதிமன்றங்கள், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் குற்றவியல் தீர்ப்புகளை அங்கீகரிக்கத் தேவையில்லை.
அதேபோல், ரஷ்யா இணைந்துள்ள ஒரு ஒப்பந்தம் அல்லது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைத் தீர்மானத்தின் அடிப்படையில், அதன் அதிகார வரம்பு அமையாத சர்வதேச நீதி அமைப்புகளின் முடிவுகளை அவை நிலைநிறுத்தத் தேவையில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |