அமெரிக்க தூதர்களுடன் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை
Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க தூதர்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் சமீப வாரங்களில் இரு தரப்பில் இருந்தும் தொலைதூர வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய தூதர்கள் ரஷ்யாவிற்கு பயணித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பாக, ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவிற்கு இவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அது 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாகவும், மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் என்றும் கிரெம்ளின் அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
அதே சமயம் இதில் எந்தவொரு முக்கிய முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது
பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்த பல கருத்துகளை விட்கோஃப், குஷ்னர் முன்வைத்தனர் என்று தெரிவித்தார். ஆனால், அந்த கருத்துக்கள் என்ன என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் அவர் கூறுகையில், "போர்க்களத்தில் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாகவும் புடின் அந்த இருவரிடமும் கூறினார். உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்த வெறும் கருத்துப் பரிமாற்றத்தைத் தாண்டி இந்தப் பேச்சுவார்த்தைகள் சென்றன.
பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான பெரிய, பரஸ்பர நன்மை பயக்கும் ரஷ்ய-அமெரிக்கத் திட்டங்கள் குறித்து ஓரளவு விரிவாக விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான நேரத்தில் நடந்ததாகவும், இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தன என்று கூறலாம்" என்றார்.
இதற்கிடையில், விட்காஃப் மற்றும் குஷ்னர் இருவரும் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |