புடின் மீது கைது ஆணை பிறப்பிக்க அழைப்பு: ஐநா வழக்குரைஞர் அதிரடி!
உக்ரைனில் தாக்குதலை முன்னெடுத்து போர் குற்றங்களை செய்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி புடின் சர்வதேச கைது ஆணையை சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடு சபையின் முன்னாள் வழக்குரைஞர் டெல் பொன்டே தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய ராணுவம் உருத்தெரியாமல் அழித்துள்ளது, மேலும் இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், ருவாண்டா, யூகோஸ்லாவியா போன்ற இடங்களில் போர் குற்றங்களை விசாரித்த ஐக்கிய நாடு சபையின் முன்னாள் வழக்குரைஞர் கார்லா டெல் பொன்டே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிரான கைது ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுவிஸ் பத்திரிக்கையில் வெளியான டெல் பொன்டேவின் பேட்டியில், உக்ரைனில் தாக்குதலை தொடங்கி போர் குற்றங்களை நடத்தியதற்காக தனது கடுமையான கண்டனத்தை அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பொதுமக்கள் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கிராமங்கள் அழித்தொழிப்பு போன்ற போர் குற்றங்கள் நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நடத்தப்பட்டு இருக்கும் மிகப்பெரிய மனித உயிர் இறப்பானது, யூகோஸ்லாவியா நடந்த போர் சோகங்களை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்தமுறை அத்தகைய மனித இறப்பு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்னவென்றால், இத்தகைய போர் தாக்குதலில் உயிரிழந்துள்ள நபர்களின் நிலைகள் குறித்த தகவல் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு தெரியாமல் இருப்பது தான்.
மேலும் செர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிச் பதவியில் இருக்கும் போதே விசாரணை நடத்தியதை சுட்டிக்காட்டி, தற்போது இத்தகைய கொடூர தாக்குதலை முன்னெடுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதும் சர்வதேச கைது ஆணை பிறப்பித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் பேசிய டெல் பொன்டே, போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகள் மீதும் போர் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.