ரஷ்யாவின் நோக்கம் இது... ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தீர்வின் ஒரு பகுதியாக குறைந்தது 200,000 ஐரோப்பிய அமைதிப்படையினர் தேவைப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பைச் சந்திக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையிலேயே ஐரோப்பிய அமைதிப்படை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, கண்டத்தைப் பாதுகாக்க ஐரோப்பியத் தலைவர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறைந்தது 200,000 ஐரோப்பிய அமைதிப்படையின் உக்ரைனில் களமிறக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மேலும், ட்ரம்புடன் ஒரு நேரடி சந்திப்புக்கு வாய்ப்பு கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, தமது குழுவினர் அது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 20ம் திகதி பொறுப்புக்கு வந்த டொனால்டு ட்ரம்ப், பதவியேற்ற 24 மணிநேரத்தில் உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவருவேன் என பலமுறை முன்னர் கூறியிருந்தார்.
அது நடக்க வாய்ப்பில்லை
ஆனால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை அவர் இதுவரை விளக்கவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக உக்ரைன் தனது இராணுவத்தின் அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்ற ரஷ்ய கோரிக்கைகளுக்கு உடன்படாது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனை அதன் ஆயுதப் படைகளை ஐந்தில் ஒரு பங்காகக் குறைக்கக் கோருவார் என்று ஜெலென்ஸ்கி கணித்துள்ளார்.
ரஷ்யாவின் நோக்கம் இது தான், ஆனால் ஒருபோதும் அது நடக்க வாய்ப்பில்லை என ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐரோப்பா தன்னை ஒரு வலுவான உலகளாவிய அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும்,
இதனால் ஐரோப்பாவிற்கும் மற்றவர்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று ஜெலென்ஸ்கி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |