FIFA உலகக் கோப்பை பரிசுத் தொகை: இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?
கத்தார் 2022 - FIFA உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணிக்கு இதுவரை வழங்கிடாத மிகப்பெரிய பரிசுத்தொகை கிடைக்கும்.
440 மில்லியன் அமெரிக்க டொலர் - FIFA
கத்தார் 2022 உலகக் கோப்பைக்காக, FIFA அமைப்பு 440 மில்லியன் அமெரிக்க டொலரை (இலங்கை பணமதிப்பில் ரூ.16,064 கோடி) ஒதுக்கியுள்ளது. இது 2018 உலகக்கோப்பைக்கு ஒதுக்கிய தொகையிலிருந்து 40 மில்லியன் அதிகமாகும்.
இறுதிப்போட்டி
கத்தாரில் நடைபெற்றுவரும் 22-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
முதல் பரிசுத் தொகை
இப்போட்டியில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றும் (Winner) அணிக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.1,533 கோடி) பரிசாக வழங்கப்படவுள்ளது. இதனை பிரான்ஸ் அல்லது அர்ஜென்டினா எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Photo Credit: Richard Heathcote
2-வது பரிசுத் தொகை
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கும் மிகப்பெரிய பரிசுத்தொகை காத்திருக்கிறது. 2-வது இடத்தை பிடிக்கும் Runner-Up அணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.1,095 கோடி) பரிசாக வழங்கப்படவுள்ளது.
3-வது இடத்துக்கான போட்டி
அதேபோல், மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.985 கோடி) மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.912 கோடி) பரிசாக FIFA வழங்குகிறது.
3-வது இடத்துக்கான போட்டி வரும் சனிக்கிழமை (டிச.17) குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
மற்ற அணிகளுக்கு FIFA வழங்கும் தொகை
thesportsgeek
மேலும், உலகக்கோப்பை போட்டியில் பங்குபெற்ற அனைத்து அணிக்கும் தரவரிசைக்கு ஏற்ப 17 முதல் 9 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
5 முதல் 8-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு 17 மில்லியன் அமெரிக்க டொலர், 9 முதல் 16-வது இடங்களில் உள்ள அணிகளுக்கு 13 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 17 முதல் 32-வது இடங்களில் உள்ள அணிகளுக்கு 9 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படுகிறது.