இரட்டை நிலைப்பாடு வேண்டாம்... இஸ்ரேல் தொடர்பில் மேற்கத்திய நாடுகளை சாடிய கத்தார்
இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க சர்வதேச சமூகம் தயாராக வேண்டும் என கத்தார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பாராத தாக்குதல்
இஸ்ரேல் விவகாரத்தில் இனியும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய எதிர்பாராத தாக்குதல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் அவசர உச்சி மாநாடு ஒன்றை கத்தார் ஏற்பாடு செய்தது. இந்த நிலையிலேயே இஸ்ரேல் தொடர்பில் சர்வதேச சமூகத்தை அல் தானி சாடியுள்ளார்.
இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு, இஸ்ரேல் செய்த அனைத்து குற்றங்களுக்கும் அதைத் தண்டிக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப் போருக்கும், அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்பதை இஸ்ரேல் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் எகிப்துடன்
காஸா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளை சீர்குலைக்க இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்றை தங்கள் நாட்டில் பராமரித்துவரும் கத்தார்,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து பல முய்ற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், அமைதிப்பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஹமாஸ் தலைவர்களை ஒவ்வொரு கட்டமாக இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீது அப்படியான ஒரு தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், தற்போது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.
திங்களன்று நடக்கும் உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது உறுதி செய்யப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |