ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம்
இந்தியா பிரான்சிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் குறித்து சமீபத்திய நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்திய விமானப்படையில் தற்போது 36 ரஃபேல் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், மேலும் 26 ரஃபேல் விமானங்களை சுமார் ₹63,000 கோடிக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தச் சூழலில், பாகிஸ்தானுடனான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ரஃபேல் விமான இழப்புகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர்: ரஃபேல் போர் விமானங்களின் பங்கு
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த கூட்டு இராணுவ நடவடிக்கையில், இந்திய விமானப்படையின் அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின.
ரஃபேல் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் போன்ற அதிநவீன ஆயுதங்கள் துல்லியமான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் 3 ரஃபேல் போர் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு உரிமை கோரியுள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் "சண்டையில் இழப்புகள் சகஜம்" என்று பதிலளித்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
பங்குகள் சரிவு
ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல், அந்த விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதற்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாளான மே 8ஆம் திகதி, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.75 சதவீதம் வரை உயர்ந்திருந்தது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் ரஃபேல் விமானங்களை வீழ்த்தியதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைச் சந்தித்தன.
குறிப்பாக, மே 12ஆம் திகதி திங்களன்று, இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 7 சதவீதம் சரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
J-10 போர் விமானங்களுக்கு வரவேற்பு
ஒருபுறம், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்த அதே சமயத்தில், J-10 போர் விமானங்களைத் தயாரிக்கும் சீனாவைச் சேர்ந்த செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) நிறுவனத்தின் பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.
மே 12ஆம் திகதி திங்களன்று, CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்து, பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும்.
பாகிஸ்தான் விமானப்படை சீன தயாரிப்பான இந்த J-10 போர் விமானங்களையே பயன்படுத்தி வருகிறது.
இந்த J-10 விமானம் மூலமாகவே 3 ரபேல் விமானங்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் போர் விமானங்களுக்கான சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற யூகங்களை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |