ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை
நள்ளிரவில் இந்தியா தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக வெளியான தகவலில் பிரெஞ்சு உளவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு உளவுத்துறை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தரப்பு ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை நள்ளிரவில் முன்னெடுத்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட Su-30MKI மற்றும் MiG-29 Fulcrum உள்ளிட்ட ஐந்து போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது.
ரஃபேல் விமானம் ஒன்று போர்க்களத்தில் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை என்ற நிலையில், ஒரு ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உயர்மட்ட பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளதாக CNN தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் இந்தியா அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும், பாகிஸ்தானால் ஒன்றுக்கும் மேற்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அதிகாரி CNN செய்தி ஊடகத்திடம் கூறியுள்ளார்.
மேலும், வெளியான புகைப்படம் ஒன்றில் விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தின் பாகங்களில் பிரெஞ்சு உற்பத்தியாளரின் லேபிளைக் காணலாம். ஆனால் சந்தேகம் கொண்டுள்ள நிபுணர்கள், இந்த பாகங்கள் ரஃபேல் விமானத்தின்தானா என்பதை உறுதிப்படுத்துவது கடினம் என்று கூறுகின்றனர்.
உத்தியோகப்பூர்வ கருத்து
வெளியான தகவலின் அடிப்படையில், ரஃபேல் விமானத்தின் பிரெஞ்சு உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷன் இன்னும் CNN முன்வைத்துள்ள கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
பிரெஞ்சு உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் ரஃபேல் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரெஞ்சு இராணுவத்திடமிருந்து எந்த உத்தியோகப்பூர்வ கருத்தும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |