ஒரு மாத சம்பளத்தை வயநாட்டிற்கு கொடுத்த ராகுல் காந்தி! எவ்வளவு ரூபாய்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி நன்கொடை
இந்திய மாநிலமான கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு தரப்பிலும், தனியார் நிறுவனங்கள் தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக தனது ஒருமாத சம்பளமான ரூ.2.3 லட்சத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வயநாட்டில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் ஒரு பேரழிவு தரும் சோகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்கொண்ட கற்பனைக்கு எட்டாத இழப்புகளில் இருந்து மீள அவர்களுக்கு நமது ஆதரவு தேவை.
பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவுவதற்காக எனது முழு மாத சம்பளத்தையும் நன்கொடையாக அளித்துள்ளேன்.
அனைத்து சக இந்தியர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்.
வயநாடு நம் நாட்டின் ஒரு அழகான பகுதி. மேலும் பலவற்றை இழந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாம் உதவலாம்" என்று கூறியுள்ளார்.
வயநாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பின் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநிலப் பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |