ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை விதிக்க கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.
மோடி குறித்து அவதூறு பேச்சு
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து கருத்துக்களை கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதில், ராகுல் காந்தி எம்.பி பதவியை இழந்தார்.
நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி
பின்பு, அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இடைக்கால தடை விதிக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
பின்னர், அவர் குஜராத் உயார்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று தீர்ப்பு
இந்நிலையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
அதில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும், அதில் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளது.
குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் ராகுல்காந்தி மீது நிலுவையில் இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |