நாடாளுமன்றத்தை அதிர வைத்த இந்து மத விவகாரம்.., மோடி, ராகுல் இடையே காரசார விவாதம்
நாடாளுமன்றத்தில் இந்து மதம் குறித்து ராகுல் காந்தி பேசியதும், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்ததும் மக்களவையே அதிர வைத்துள்ளது.
இந்து மதம்
நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி மக்களவையில் இந்து மதம் குறித்து பேசியதும், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்ததும், அதன் பின்னர் பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாது பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் பற்றி பேசியுள்ளார்.
மேலும், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய்களை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இவரின் கருத்துக்கு அனைத்து பாஜக எம்பிக்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். பின்னர் பேசிய மோடி, "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |