மேகவெடிப்பால் அதிகனமழையல்ல.., என் அனுபவத்தில் இவ்வளவு மழை பெய்ததில்லை: வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன்
என் அனுபவத்தில் நான் இவ்வளவு மழையை பார்த்ததில்லை என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தென் தமிழக மழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் போக போக இடைவிடாமல் கனமழையாக பெய்ய தொடங்கியது.
இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசுகையில்,"வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த ஒக்டோபர் மாதம் ஒன்றாம் திகதியில் இருந்து இதுவரை 44 செமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையை விட 5 % அதிகம்.
தமிழக மாவட்டமான கன்னியாகுமரியில்103 சதவீதமும், நெல்லையில் 135 சதவீதமும், தூத்துக்குடியில் 68 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது.
மேகவெடிப்பல்ல
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்தால்தான் மேகவெடிப்பு. ஆனால், இங்கு நாள் முழுவதும் தொடர் மழை பெய்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதல்முறை.
மேகவெடிப்பால் அதி கனமழை பெய்யவில்லை. 1931 -ம் ஆண்டுக்கு பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிக கனமழை பெய்துள்ளது. எனது அனுபவத்தில் இவ்வளவு மழையை பார்த்ததில்லை" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |