தலைவர் பிரபாகரன் நேரடியாகவே கேப்டனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்! நடிகர் மீசை ராஜேந்திரன்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, 2008ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனே நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார் என நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் மறைவு
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அர்ஜுன் போன்ற சில நடிகர்கள் அவரது இறப்பிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் நடிகர்கள் அஜித் குமார், வடிவேலு, சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் வராதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர்விட்டு அழுதது பேசுபொருளானது.
கொந்தளித்த நடிகர் மீசை ராஜேந்திரன்
இந்த நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், விஜயகாந்தின் மறைவுக்கு வராமல் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய நடிகர்களை கடுமையாக விளாசியுள்ளார்.
அவர் பேசும்போது, கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் நடித்துவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். தங்களின் பெயர் கேட்டுவிடுமோ என்று வந்து அஞ்சலி செலுத்தும்போது அழுதுள்ளனர்.
இவர்கள் சினிமாவிலும் நடிக்கிறார்கள், வாழ்விலும் நடிக்கிறார்கள். அஞ்சலி செலுத்துவது என்பது உண்மையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் மட்டுமே ஆத்மார்த்தமாக இரங்கல் தெரிவித்தனர் என்றார்.
தலைவர் எழுதிய கடிதம்
மேலும் பேசிய ராஜேந்திரன், 'உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஒண்ணுனா முதன் முதலில் குரல் கொடுத்த நடிகர் யாருன்னு கேட்டீங்கனா அது கேப்டன் தான்.
1983யில் முதன் முதலாக குரல் கொடுத்த நடிகர் தான் கேப்டன். 2008யில் திரு. பிரபாகரன் அவர்கள் நேரடியாகவே கேப்டன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் தான் எங்கள் கேப்டன் விஜயகாந்த்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |