அக்டோபர் முதல்... கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் பிரான்ஸ் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவு
அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வாக்கில், பிரான்சில் யார் வேண்டுமானாலும் இலவச கொரோனா பரிசோதனைகள் செய்துகொள்ள முடியாது என்பதை பிரான்ஸ் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர் Jean Castex, அக்டோபர் மாதம் 15ஆம் திகதியிலிருந்து கொரோனா பரிசோதனைகள் அனைத்து தரப்பினருக்கும் இலவசம் அல்ல என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 15ஆம் திகதிக்குப் பின் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதாவது, கொரோனா அறிகுறிகள் கொண்டவர்கள் அல்லது கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பிலிருந்தோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் இலவசம். தடுப்பூசி பெறாதவர்கள் இலவச பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், அவர்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்தால் மட்டுமே அவர்களுக்கு இலவச பரிசோதனை. தடுப்பூசி பெற்றவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில்லை.
ஆனால், அனைத்து சந்தர்ப்ப சூழல்களிலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், பள்ளிகளில் பயில்வோருக்கும் இலவச பரிசோதனை தொடரும்.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சுகாதார பாஸ்போர்ட் பெறுவதற்காக தடுப்பூசி பெறாதவர்கள் இலவச கொரோனா பரிசோதனைகள் செய்வதை தடுப்பதாகும்.
இனி அத்தகையவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய விரும்பினால், அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதால், அதற்கு பதிலாக தடுப்பூசி பெற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.