300 ஆண்டுகளில் இல்லாத அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு!
அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரம் 300 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அரிய வகை வைரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் அரிய வகை வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த லுகாபா டயமண்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '170 காரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரமானது The Lulo Rose என்று அழைக்கப்படுகிறது. இது அங்கோலாவின் லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் இதுதான்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ இது குறித்து கூறுகையில், லுலோ சுரங்கத்தில் இருந்து கண்கவர் வைரம் எடுக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் அங்கோலா முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளது என தெரிவித்தார்.
எனினும், இந்த வைரத்தின் உண்மையான மதிப்பை அறிய மெருகூட்ட வேண்டும் என்றும், அப்படி செய்யும்பட்சத்தில் அதன் எடை சுமார் 50 சதவீதம் இழக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ndtv
கடந்த 2017ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில், பிங்க் ஸ்டார் என்ற 59.6 காரட் எடை கொண்ட வைரம் 71.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. இதுதான் அதிக விலைக்கு விற்கப்பட்ட வைரம் ஆகும்.
தற்போது அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரம், சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.