இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இங்கிலாந்தின் இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிக்கி மெக்கலம், இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) விரைவில் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் G20 பிரேசில் உச்சிமாநாட்டின் சந்தித்த போது, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த (free trade agreement) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் இந்தியாவின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் ஊடாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புத்தாண்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
சமநிலையான, பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் முன்னோக்கிய பார்வையுடைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, பரஸ்பர திருப்தியுடன் மீதமுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.
2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் ராஜதந்திர வழிமுறை மூலம் விரைவில் இறுதி செய்யப்படும்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் முன்னர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து விவாதங்களை மீண்டும் தொடங்கும். மேலும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கான இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்கும்.
இங்கிலாந்துடனான இந்தியாவின் வர்த்தக உறவு தொடர்ந்து சீராக வளர்ந்து வருவதுடன், ஆழமான ஒத்துழைப்பு மற்றும் ராஜீய ஈடுபாட்டிற்கான மகத்தான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதி 12.38% என்ற வலுவான வளர்ச்சியைக் கண்டது. இது 7.32 பில்லியன் டொலரை எட்டியது.
இது 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.51 பில்லியன் டொலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, கனிம எரிபொருட்கள், இயந்திரங்கள், விலைமதிப்பற்ற கற்கள், மருந்துகள், ஆடைகள், இரும்பு மற்றும் எஃகு, ரசாயனங்கள் ஆகியவை இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதியை வழிநடத்துகின்றன. இது மொத்த ஏற்றுமதியில் 68.72% பங்களிக்கிறது.
2029-30 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்துக்கான எங்கள் ஏற்றுமதி 30 பில்லியன் டொலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் நிதியாண்டில் எங்கள் லட்சியமான 1 டிரில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு இங்கிலாந்து முன்னுரிமை நாடாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |