அதிகரிக்கும் போர் பதற்றம்! உயிரையும் கொடுப்போம்... ரஷ்யாவுக்கு எதிராக திரளும் உக்ரைன் சிறுவர்கள்
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் எப்போது வேண்டுமானாலும் படையெடுப்பு நடத்தலாம் என்ற இறுக்கமான சூழலில் வெறும் பத்து வயது நிரம்பிய சிறார்கள் ஆயுதப் பயிற்சிக்காக திரளும் சம்பவம் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ஆயுதங்கள், துருப்புகள் தொடங்கி சுகாதார சேவைகள், ரத்த வங்கியும் அமைத்து தயார் நிலையில் உள்ளது ரஷ்யா. உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகிறது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் நேரிடையாக சென்று தங்களது ஆதரவை தெரிவித்து வந்துள்ளார். பிரித்தானிய பிரதமர் உக்ரைன் தலைநகருக்கு செல்லும் திட்டத்துடன் உள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் பெண்கள் ஆயுதமெடுத்து போராடும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாக பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது 10 வயது நிரம்பிய சிறார்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் பயிற்சிகாக திரள்வதாக ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம் என்ற நிலையில், உக்ரைன் அரசு பொதுமக்களுக்கும் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சி அளிக்க முதன்முறையாக முன்வந்துள்ளது.
விதிகளின் படி 18 வயது நிரம்பினால் மட்டுமே பிராந்திய பாதுகாப்பு படையில் இணைய முடியும். இருப்பினும் நான்கு வயது நிரம்பிய சிறார்களும் தற்போது பயிற்சியில் களம்கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உக்ரைனுக்கு அழுத்தம் தரும் வகையில் கிரிமியா பகுதியில் 10,000 துருப்புகளை அனுப்பி வைத்துள்ளது ரஷ்யா இதனால் உக்ரைன் தற்போது அதன் கிழக்குப் பகுதியில் 126,000 ரஷ்ய துருப்புகளையும், வடக்கு எல்லையில் 80,000 ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய துருப்புகளையும் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.