தலைநகரை சுற்றி வளைத்த கிளர்ச்சியாளர்கள்... ஜனாதிபதி தப்பியிருக்கலாம் என தகவல்
மின்னல் வேகத்தில் முன்னேறும் சிரியா கிளர்ச்சியாளர்கள் படை, தலைநகரை சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அசாத் தற்போதும்
ஆனால் தலைநகரில் இருந்து வெளியேறவில்லை என சிரியா இராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸை சுற்றி வளைக்கும் இறுதிக் கட்டப் பணியை நமது படைகள் தொடங்கிவிட்டன என்று கிளர்ச்சியாளர்கள் தளபதி ஹசன் அப்தெல் கானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிரியா இராணுவம் உயிருக்கு பயந்து தலைநகருக்கு அருகிலுள்ள முகாம்களில் இருந்து தப்பியோடியதாக வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தலைநகரைச் சுற்றி அரண் போல இராணுவம் நிலைகொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, ஜனாதிபதி அசாத் தற்போதும் தலைநகரில் இருப்பதாக அரசாங்கம் தரப்பில் கூறி வந்தாலும், அவர் வெளியேறியிருக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவுக்குள் இருப்பதாக அப்தெல் கானி தெரிவித்திருந்தார், மேலும் போர் முனையில் இருந்து அரசாங்கப் படைகள் பின்வாங்கின என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் சிரியா இராணுவம் முக்கிய நகரங்களை இழந்து வருவதுடன், தெற்கு தாரா மாகாணத்தின் கட்டுப்பாட்டையும் இழந்து, இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கோலன் குன்றுகளுக்கு அருகிலுள்ள குனிட்ராவில் உள்ள முகாம்களையும் விட்டு வெளியேறியுள்ளன என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு முகமை உறுதி செய்துள்ளது.
மட்டுமின்றி, தலைநகர் டமாஸ்கஸிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நகரங்களில் இருந்தும் சிரியா இராணுவம் வெளியேறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதவெறி மற்றும் கொடுங்கோன்மை
தலைநகரை நெருங்கி விட்டதாகவே அப்தெல் கானி தெரிவித்துள்ளார். சிரியா இராணுவம் மற்றும் நட்பு நாடான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களில் ஹோம்ஸ் நகருக்கு அருகில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பை உறுதியளிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து மதத்தினரும் சமம் என குறிப்பிட்டுள்ள அப்தெல் கானி, மதவெறி மற்றும் கொடுங்கோன்மை சகாப்தம் என்றென்றும் முடிவுக்கு வர இருப்பதால், அனைத்து மதப்பிரிவினருக்கும் உறுதியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜிஹாதிகளுக்கு எதிரான கூட்டணியின் ஒரு பகுதியாக சிரியாவில் படைகளை நிறுத்தியிருக்கும் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
ஜனநாயகப் போராட்டங்கள் மீதான அசாத்தின் ஒடுக்குமுறையை அடுத்து சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதில் 500,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
தற்போது, கடந்த வாரம் தொடங்கிய கிளர்ச்சியில், இதுவரை 111 பொதுமக்கள் உட்பட 826 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 370,000 மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக கண்காணிப்பு முகமை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |