ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மீண்டும் திரும்பும் பறவைக்காய்ச்சல்: மனிதர்களுக்கு அபாயம் உள்ளதா?
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பல இடங்களில் மீண்டும் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது.
பறவைக் காய்ச்சல் பரவும் பட்சத்தில், பல மில்லியன் கோழி முதலான பறவைகளைக் கொல்லவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
சீனாவில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் பயங்கரமாக பரவியுள்ளதுடன், 21 மனிதர்களுக்கும் அந்நோய் பரவியுள்ளது.
தென்கொரியாவிலுள்ள ஒரு பண்ணையில் மாபெரும் பறவைக்காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அங்கு, 770,000 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிலும் பறவைக்காய்ச்சல் காணப்படுகிறது. ஆனால், எத்தனை பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. நார்வேயிலுள்ள Rogaland பகுதியில், 7,000 பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் காட்டு வாத்து ஒன்றில் பயங்கர பறவைக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கோழிகள், வாத்துகள் முதலான உணவுக்கு பயன்படும் பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்திலும் சிறிய அளவில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
பறவைகள் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கும் இடம்பெயரும்போது, இந்த பறவைக்காய்ச்சலும் பரவுகிறது.
அப்படி பறந்து செல்லும் ஒரு பறவைக்கு தொற்று இருக்கும் பட்சத்தில், அது தான் எங்கே பறந்து செல்கிறதோ அங்குள்ள பறவைகளுக்கு இந்த பறவைக்காய்ச்சலைப் பரப்பிவிடுகிறது.
இப்படி வைரஸ் தொற்றிய பறவைகளைத் தொடும் மனிதர்களுக்கும் அந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என அமெரிக்க நோய் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பறவையைத் தொடும் மனிதர்களின் கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக இந்த வைரஸ் நுழைந்து அவர்களுக்கு நோய்த்தொற்றை உருவாக்கக்கூடும்.
அப்படி மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவினால், 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக அது மரணத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.