ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்: துணிச்சலாக செயல்பட்ட அகதி
ஜேர்மனியில், புலம்பெயர்ந்தோர் தாக்குதல் நடத்தும் விடயங்கள் சமீப காலமாக தலைப்புச் செய்திகளாகிவரும் நிலையில், கத்தித் தாக்குதல் நடத்தி 18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண்ணொருவரை துணிச்சலாக மடக்கிப் பிடித்த அகதி ஒருவருக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.
18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண்
வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் 39 வயதுள்ள ஜேர்மன் நாட்டவரான பெண்ணொருவர் திடீரென பொதுமக்களை கத்தியால் தாக்கினார்.
அந்த தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துணிச்சலாக செயல்பட்ட அகதிகள்
இருவர் இந்நிலையில், அந்தப் பெண் கத்தியால் தாக்குதல் நடத்துவதைக் கண்ட மக்கள் தப்பியோட முயல, ஒரு அகதி அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளார்.
அவரது பெயர் முகம்மது அல் முகம்மது (19). மற்றவர்கள் அந்தப் பெண்ணிடமிருந்து தப்பியோடுவதைக் கண்ட தான், அந்தப் பெண்ணை நோக்கி ஓடியதாக தெரிவிக்கிறார் முகம்மது.
அவர் அந்தப் பெண்ணை நெருங்கவும், செசன்யா நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் அந்தப் பெண்ணை முழங்காலில் மிதிக்க, அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார்.
உடனே, அவர் மீது பாய்ந்த முகம்மது, அந்தப் பெண்ணின் கையை அவரது முகுதுப் பையுடன் சேர்த்து அழுத்திவைத்துக்கொள்ள, பொலிசார் வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.
அந்தப் பெண் சத்தமிடவோ, தன்னைக் கைது செய்யும்போது முரண்டுபிடிக்கவோ இல்லை என்கிறார் முகம்மது. சம்பவம் நடந்த அன்று ஊடகங்கள் பலவும் இதே விடயத்தைக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெண்ணால் மேலும் பலர் தாக்குதலுக்குள்ளாவதைத் தடுத்த முகம்மதுவை பாராட்டிய பொலிசார், அவருக்கு காபி ஒன்றை வாங்கிக்கொடுத்து அனுப்பினார்களாம்.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மன நிலைமை காணப்படும் நிலையில், ஊடகங்கள் சில முகம்மதுவின் கதையும் சொல்லப்படவேண்டும் என குறிப்பிட்டு, மேலும் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த அவரை பாராட்டியுள்ளன.
அதே நேரத்தில், முகம்மதுவுடன், அந்தப் பெண்ணைத் தடுத்த மற்றொரு புலம்பெயர்ந்தோர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |