ட்ரம்பின் நெருக்கடி... வெனிசுலா எண்ணெய் வாங்க திட்டமிடும் இந்தியாவின் ரிலையன்ஸ்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் உரிமையாளரான இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், வெனிசுலா எண்ணெயை வாங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்டால்
உக்ரைன் போரைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் இருக்க மலிவு விலையில் எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுத்து வந்தது ரஷ்யா.

இதை மிகப்பெரிய வாய்பாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை மலிவு விலையில் வாங்கி, சுத்திகரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
உக்ரைனும் தங்கள் எரிபொருள் தேவைக்கு இந்தியாவை நாடியிருந்தது. ரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் இறக்குமதி செய்து வந்த ரிலையன்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்களால், ட்ரம்ப் நிர்வாகம் இந்திய அரசாங்கத்திற்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.
இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியில் புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இறக்குமதி செய்து வருவதாகவும் ரிலையன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால் வெனிசுலா எண்ணெயை வாங்குவது குறித்து பரிசீலிப்பதாக ரிலையன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவே கட்டுப்படுத்தும்
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா அல்லாத நாடுகள் வெனிசுலா எண்ணெயை வாங்குவது குறித்த தெளிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் இணக்கமான முறையில் எண்ணெயை வாங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்ததன் பின்னர், அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் அமெரிக்காவே கட்டுப்படுத்தும் என டொனால்ட் ட்ரம்ப் கூறி வரும் நிலையில், புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள வெனிசுலா ஜனாதிபதி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவிற்கு மறுப்பு தெரிவித்தால், மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அரசியல் சிக்கல்களுக்கு நடுவே, வெனிசுலா எண்ணெயை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |