அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்ட தாலிபான்கள்... அடுத்த நாளே பெரும் உதவியை குவித்த நாடு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த அடுத்த நாளே பெரும் உதவிகளை அறிவித்துள்ளது சீனா.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்துள்ளனர். இதில் அமெரிக்காவில் உயரடுக்கு பாதுகாப்பு சிறையில் இருந்த நால்வருக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு 228 கோடிக்கு (31 மில்லியன் டொலர்) பொருள் உதவிகளை அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இதில் உணவுப்பொருட்கள், தடுப்பூசி, மருந்துகள் என மிக அத்தியவாசியத் தேவைகளுக்கான பொருட்கள் இருக்கும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக 30 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக வழங்குவதாக சீன அமைச்சர் கூறினார்.
மேலும், தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு உதவும் கடமை அமெரிக்காவுக்கும் இருப்பதாக அமைச்சர் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்கள் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு சீன நிர்வாகம் ஆப்கானிஸ்தானுக்கு இந்த உதவியை அறிவித்துள்ளது.