கொரோனா சிகிச்சைக்கான பட்டியலில் இருந்த இந்த மருந்து நீக்கம்! முடிவு உங்க கையில் தான் இருக்கு... WHO அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, நோயாளிகளுக்கு அளிக்கக்கூடிய மருந்துகள் ஆகியவை அடங்கிய தகுதிப் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது.
இந்த பட்டியலின் அடிப்படையில் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் பரிந்துரை செய்யும். இந்நிலையில் இந்த தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.
இந்த ரெம்டெசிவிர் மருந்தானது ஜிலெட் சயின்ஸஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆகும்.
இதற்கு முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் விடுத்திருந்த எச்சரிக்கையில், ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்பது குறித்து எந்த வித ஆதாரமும் இல்லை என்பதால், கொரோனா நோயாளிகள் எத்தகைய தீவிரமான நோய் பாதிப்பு உடையவராக இருந்தாலும், அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று கூறியிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.