முன்பு ஆளுநர் பதவியை அகற்றக் கூறிய நிலையில்.., இன்று ஆளுநரை சந்தித்ததால் விஜய்க்கு தொடரும் விமர்சனம்
கட்சி கொள்கையில் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்திய நிலையில், இன்று ஆளுநரை தவெக தலைவர் சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
என்ன முரண்பாடு?
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொள்கையில் ஆளுநருக்கு எதிரான நிலைப்பாடுகூறிவிட்டு தற்போது ஆளுநரை விஜய் நேரில் சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொள்கையில் மாநில உரிமை எனும் தலைப்பில், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |