ரஷ்ய எரிவாயு விநியோகம்... எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு
ரஷ்யாவும் உக்ரைனும் சமாதான ஒப்பந்தத்தை எட்டினாலும், ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ஒருபோதும் மீட்டெடுக்கக்கூடாது என்று போலந்து ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
பாடம் கற்றுக்கொள்வார்கள்
அத்துடன், 2022 முதல் பயன்படுத்தப்படாத நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களையும் அகற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி Andrzej Duda,
இந்த குழாய் வழியாக எரிவாயுவை மீண்டும் விநியோகம் செய்வதை ஒருபோதும் மீட்டெடுக்க மாட்டோம் என்ற முடிவை ஐரோப்பிய தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசிய போலந்து ஜனாதிபதி, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பலனளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவுடன் வணிக தொடர்புகளை மீண்டும் முன்னெடுக்க நிறுவனங்களின் அழுத்தத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்க்க வேண்டும் என்றார். ரஷ்யாவின் எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமால் கட்டப்பட்ட நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் ரஷ்யாவிற்கும் வடக்கு ஜேர்மனிக்கும் இடையில் இயங்குகின்றன.
தீவிர வலதுசாரி AfD கட்சி
உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து, 2022 இல் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மூடப்பட்டது. ஆனால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இந்த நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் மூடப்பட்டதன் பிறகு ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் உயர்ந்தன.
மிக சமீபத்தில் ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சி மீண்டும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் இயக்கத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது. பிப்ரவரி மாத இறுதியில் பெடரல் தேர்தலை நடத்த உள்ளது ஜேர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |