தெலங்கானாவின் பிதாமகர் கே.சி.ஆரை மண்ணை கவ்வ வைத்த ரேவந்த் ரெட்டி: யார் இவர்?
தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்தே அங்கு ஆட்சியை தக்கவைத்து வந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை தற்போது காங்கிரஸ் தோற்கடித்துள்ளது.
தெலங்கானாவில் ஆட்சி
நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64ல் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியே தெலங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
@hansnews
காமாரெட்டி தொகுதியில் தற்போதைய முதல்வரான கே சந்திரகேசர ராவும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ரேவந்த் ரெட்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ரேவந்த் ரெட்டி முன்னிலையில் உள்ளார்.
அத்துடன் தெலங்கானாவின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.
2009ல் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார். 2014ல் புதிதாக தெலங்கானா மாநிலம் உருவானபோது தெலங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி முன்னிலையில்
ஆனால் 2015ல் லஞ்ச வழக்கில் சிக்கிய ரேவந்த் ரெட்டி, மே மாத இறுதியில் ஊழல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ஜூலை 1ம் திகதி விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அவர், 2017 அக்டோபர் மாதம் டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
@ani
இந்த நிலையில், 2021ல், காங்கிரஸ் கட்சி அவரை மாநிலத் தலைவராகத் தெரிவு செய்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வந்த நிலையில், மூன்றாமிடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி, ரேவந்த் ரெட்டி தலைமையில் புத்துயிர் பெற்றது.
கர்நாடகாவுக்குப் பிறகு தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் தலைமை அதிக கவனம் செலுத்தியதால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
கட்சியில் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுப்பதாக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்தாலும் தனக்கே உரித்தான பாணியில் செயல்பட்டு நற்பெயர் பெற்றவர் ரேவந்த் ரெட்டி.
மட்டுமின்றி, காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதுடன், ஆட்சியை கைப்பற்றும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |