ரொனால்டோ விளையாட தடை: அல் நாசர் கிளப்பிற்கு காத்திருந்த அதிர்ச்சி
கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய புதிய அல் நாசர் கிளப்பிற்காக ஜனவரி 6ம் திகதி விளையாட இருந்த நிலையில், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் அவர் இரண்டு போட்டிகளில் விளையாட கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய அணியில் ரொனால்டோ
மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி பிறகு, சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்துடன், 2025ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்கு விளையாட கால்பந்து வீரர் ரொனால்டோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
ரொனால்டோவின் வருகையை முன்னிட்டு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் கடந்த திங்கட்கிழமை பிரம்மாண்டமான வரவேற்று அளிக்கப்பட்டு இருந்தது, மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நாசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய அணியுடன் தனது பயிற்சியை தொடங்கிய ரொனால்டோ, ஜனவரி 6ம் திகதி அல்-நாசர் கிளப்பிற்காக முதல் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்த போட்டியை காண சுமார் 28,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையும் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் நவம்பர் மாதம் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருப்பது அதற்கு பிறகு தான் அல்-நாசர் கிளப்புக்கு தெரிவிக்கப்பட்டது.
எதற்காக தடை விதிக்கப்பட்டது?
ரொனால்டோ மீதான இந்த தடைக்கு அவர் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் ரசிகர் ஒருவரின் கைப்பேசியை தட்டிவிட்டது காரணமாக சொல்லப்படுகிறது.
அந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து இருந்த போது, கால்பந்து வீரர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பிறகு ஆட்டிசம் குறைபாடுடைய 14 வயதான ஜாக்-கிடம் ரொனால்டோ தனது மன்னிப்பை கோரி இருந்தார்.
ரொனால்டோவின் இந்த கடுமையான நடத்தைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை தெரிவித்து இருந்தார்கள், அதே நேரத்தில் ரொனால்டோ இரண்டு போட்டிகளில் விளையாட தடையும் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் விதித்து இருந்தது. ஆனால் உலக கோப்பை கால்பந்து போட்டியின் காரணமாக அவரை தடை செய்ய முடியவில்லை. அதனால்தான் அந்தத் தடையை புதிய கிளப்பில் தற்போது அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரியவந்துள்ளது.
Reuters
ஃபிஃபா விதிகளின்படி, வீரருக்கு ஒருவருக்கு நான்கு போட்டிகள் அல்லது மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்றால் அந்த வீரர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய கிளப்பில் சேர்ந்த பிறகும் அதைச் செயல்படுத்துவது கட்டாயம் என்று கூறப்படுகிறது.
இதனால் ரொனால்டோ தன்னுடைய புதிய கிளப்பிற்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.