FIFA உலகக் கோப்பை 2022: 'ஜீனியஸ்' மெஸ்ஸிக்கு வாழ்த்து கூறிய ஜாம்பவான் ரொனால்டோ!
22-வது உலகக்கோப்பையில் வெற்றியாளர் குறித்த தனது கணிப்பை பொய்யாக்கிய லியோனல் மெஸ்ஸிக்கு ஜாம்பவான் ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ
கத்தார் 2022 - FIFA உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்லும் என்ற தனது கணிப்பை பொய்யாக்கி காட்டிய அர்ஜென்டினாவின் 'மேதை' மெஸ்ஸிக்கு பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி
Showkat Shafi/Al
கத்தார் லுசைல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைப்பற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்த பிரான்ஸ் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது.
90 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் போட்டியில் கூடுதலாக 30 நிமிடங்கள் சேர்க்கப்பட்டது, கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆட்டத்தின் முடிவிலும் இரு அணிகளும் 3-3 என்ற சமமான நிலையில் மல்லுக்கட்ட, பெனால்டி சூட் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, (1986) 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.
Getty images
மெஸ்ஸியின் வெற்றியை கொண்டாடிய உலகம்!
அர்ஜென்டினா அணியின் வெற்றியின் எதிரொலி உலகம் முழுவதும் கேட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை தங்களின் வெற்றியைப் போல் கொண்டாடினர்.
இதையடுத்து, புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ நசாரியோ அர்ஜென்டினா மற்றும் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை ட்விட்டரில் பாராட்டினார்.
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை கால்பந்தில் மிகவும் கடுமையான போட்டியாளர்களாக இருந்தாலும், மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதைக் கண்டு பிரேசிலியர்கள் கூட மகிழ்ச்சியடைந்ததாக ரொனால்டோ ஒப்புக்கொண்டார்.
வாழ்த்துகள் மெஸ்ஸி!
அவரது ட்விட்டர் பதிவில், "இந்த இளைஞனின் ஆட்டம் எந்தப் போட்டியையும் மூலைக்கு தள்ளிவிடுகிறது. பல பிரேசிலியர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் - இந்த இறுதிப் போட்டியில் மெஸ்ஸிக்காக ஆதரவளித்ததை நான் கண்டேன். உலகக் கோப்பை நட்சத்திரம் என்பதைத் தாண்டி, ஒரு மேதைக்கு தகுதியான ஒரு பிரியாவிடை இது, அவர் ஒரு சகாப்தத்தின் தலைவராக இருந்தார். வாழ்த்துகள் மெஸ்ஸி!" என்று ரொனால்டோ ட்விட்டரில் எழுதினார்.
முன்னதாக, அவர் நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸ் அணி இம்முறையும் உலகக்கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது கணிப்பை பொய்யாக்கிய மெஸ்ஸியை தான் இப்போது அவர் மேதை என பாராட்டியுள்ளார் ரொனால்டோ நசாரியோ.
O futebol deste cara joga pra escanteio qualquer rivalidade. Vi muito brasileiro - e gente do mundo inteiro - torcendo pelo Messi nesta final eletrizante. Uma despedida à altura do gênio que, muito além de craque da Copa, capitaneou uma era.
— Ronaldo Nazário (@Ronaldo) December 18, 2022
Parabéns, Messi! pic.twitter.com/djwuKJzexa
ஜெர்மனிக்கு எதிரான 2014 இறுதிப் போட்டியில் மெஸ்ஸி கசப்பான தோல்வியைச் சுவைத்தார், ஆனால் அவரது ஐந்தாவது மற்றும் இறுதி உலகக் கோப்பையில், 35 வயதான 1986-க்குப் பிறகு முதல் முறையாக தனது நாட்டுக்கு உலகக் கோப்பை பட்டத்தை பெற்று கொடுத்தார்.