இந்த இரு நாடுகளுக்குத் தட்டுப்பாடின்றி எண்ணெய் விநியோகம்... உறுதி அளித்த ரஷ்ய நிறுவனம்
இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிலிருந்து தட்டுப்பாடினிறி எண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்து பெறுவார்கள் என Rosneft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிலையான விநியோகம்
சனிக்கிழமையன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய Rosneft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இகோர் செச்சின், இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் கூட்டாளியாகக் குறிப்பிட்டதுடன், உலகளாவிய எரிபொருள் நுகர்வு வளர்ச்சியில் இந்தியாவின் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய விநியோகத்திலிருந்து ரஷ்யாவை விலக்க முடியாது. உலகளாவிய எண்ணெய் துறையில் சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில், சீனா மற்றும் இந்தியாவுடனான ரஷ்யாவின் பொருளாதாரக் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் நிலையான விநியோகத்தை உறுதி செய்கிறது என அறிக்கை ஒன்றில் செச்சின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் எங்கள் கூட்டாளிகளுக்குக் குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பலன்களை அளிக்கிறது. ஏப்ரல் 2022 முதல், சீனா மற்றும் இந்தியாவுக்கான இதன் மொத்த மதிப்பு 40 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளது என்றார்.
கடுமையான விலைச்சலுகைகளை வழங்கியதைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிக அளவில் விநியோகிக்கும் நாடாக ரஷ்யா மாறியது.
சர்வதேச எரிசக்தி முகமையின் தரவுகளை மேற்கோள்காட்டிப் பேசிய செச்சின், 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தினசரி எண்ணெய் நுகர்வு ஏறக்குறைய 8 மில்லியன் பீப்பாய்களை எட்டும் என்று கூறினார்.

எதிர்மறையான தாக்கம்
இது 44 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது, அதே வேளையில் உலகளாவிய தேவை 5 சதவீதம் மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசிய மோதலின் இந்திய மீதான தாக்கம் குறித்துப் பேசிய செச்சின்,
ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள முடக்கம், புதிய அபாயங்களுடன் சேர்ந்து, துரதிர்ஷ்டவசமாக இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

ஆனால், இது எரிசக்திப் பாதுகாப்பில் நீண்டகாலத் தீர்வுகளைத் தேடுவதற்கான ஒரு தூண்டுதலாகவும் அமைகிறது என செச்சின் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் 60 முதல் 70 சதவீதத்தை மேற்கு ஆசியா பூர்த்தி செய்து வந்தது.
அதன் பின்னர், போர் மற்றும் முற்றுகையின் காரணமாக அந்த விநியோகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா தனது இறக்குமதிகளை மேலும் பன்முகப்படுத்தி, ரஷ்யா, வெனிசுலா மற்றும் ஆப்பிரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல்களை அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதை அடுத்து உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |