வாக்குவாதத்தால் ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு! பயணிகள் உள்பட 4 பேர் பலி
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயணிகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி:
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த ரயிலில் பயணித்த பயணிகள் உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்பு படை (RPF) காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளார்.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கு ஜெய்ப்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இந்த சம்பவத்தை நடத்தியுள்ளார்.
மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே வந்த போது காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
காரணம் என்ன?
ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் சேத்தன்சிங்கிற்கும், அவருடன் பயணித்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களை ரயிலில் இருந்த பயணிகள் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் தான் கான்ஸ்டபிள் சேத்தன்சிங் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பயணிகள் பலியானதாக கூறப்படுகிறது.
காவலர் கைது
இந்நிலையில், நான்கு பேரை சுட்டுக் கொன்ற கான்ஸ்டபிள் சேத்தன்சிங் தாஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரை ரயில்வே போலீசார் கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |