ரஷ்ய விமானங்கள் மீதான தாக்குதல் போருக்கு காரணமாகும்... மிரட்டல் விடுத்த ரஷ்யா
ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவது போருக்கு வழி வகுக்கும் என ரஷ்ய தூதர் ஒருவர் நேட்டோ அமைப்பிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
போலந்து திட்டம்
ரஷ்யாவின் ஐரோப்பிய அண்டை நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறியதாக அந்த நாட்டின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ஏவப்படும் ரஷ்ய ட்ரோன்களை வீழ்த்துவதற்கு நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் இல்லாமல் தனது இராணுவத்தை அனுமதிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற போலந்து திட்டமிட்டு வருகிறது.
போலந்து வான்பரப்பில் இந்த மாதம் பலமுறை அத்துமீறல் நடந்துள்ள நிலையிலேயே, அந்த நாடு இந்த முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை எஸ்தோனியாவின் வான்வெளியில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறியதாக தகவல் வெளியானது.
அத்துடன், திங்களன்று கோபன்ஹேகன் விமான நிலையம் மூடப்படும் நிலைக்கு ட்ரோன்களை அனுப்பியதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ நாடுகள் தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடும் என்று எச்சரித்தார்.
நேட்டோ எல்லைக்குள்
இந்த நிலையிலேயே பிரான்ஸுக்கான ரஷ்ய தூதர் Alexey Meshkov கடுமையான வார்த்தைகளால் பதிலளித்துள்ளார். ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால், அது போருக்கான அறிகுறியாக கருதப்படும் என்றார்.
ரஷ்ய வான்பரப்பை பல நேட்டோ விமானங்கள் அத்துமீறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு ஐரோப்பா முழுவதும் சமீபத்திய ட்ரோன் ஊடுருவல்களில் ரஷ்யாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் மீதான தாக்குதலின் போது போலந்து குறைந்தது மூன்று ரஷ்ய ட்ரோன்களை வீழ்த்தியது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, நேட்டோ எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது இதுவே முதல் முறை.
இதனிடையே, ருமேனியாவும் ரஷ்ய ட்ரோன் ஒன்று தங்களின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அறிவித்தது. இந்த நிலையில், ஊடுருவலும் நேட்டோவின் பதிலும் போர் மேலும் பரவக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |