தண்ணீர் கொதிக்க வைக்க எரிபொருள் வேண்டும்: அயர்லாந்திடம் மன்றாடும் ரஷ்யா
அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம் தங்களது எரிபொருள் தட்டுப்பாடை நீக்குவதற்கு விரைவாக உதவுமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போர் தாக்குதலை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளும், தொழில் நிறுவனங்களும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
மறுமுனையில், ரஷ்யாவின் இந்த பயங்கரவாத செயல்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சார்ந்த பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து, அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிபொருள் விற்பனை தொழில் நிறுவனங்கள் எரிபொருள் வழங்க மறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உலகத்தின் முதன்மை எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தி நாடான ரஷ்யாவிற்கு தற்போது அயர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அறைகளை வெப்பமூட்டுவதற்கும், தண்ணீர் காய்ச்சிவதற்கும் முடியாமல் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் ரஷ்ய தூதரகத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த எரிபொருள்களும் அடுத்த வாரத்துடன் தீர்ந்து விட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் தேவையை தீர்ப்பதற்கு அயர்லாந்து அரசு உடனடியாக உதவவேண்டும் என ரஷ்ய தூதரகம் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதரகத்தின் இந்த வேண்டுகோளை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அயர்லாந்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை எரிபொருளை வழங்க மறுத்து விட்டதாக அயர்லாந்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.