பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!
பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இதனிடையே நேற்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ரஷ்யாவுக்குச் சொந்தமான, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அதன் வான்வெளியை மூடுவதாக அறிவித்தார்.
தொழிலதிபர்களுக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானங்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்குள் ரஷ்ய விமானங்களால் தரையிறங்கவோ, புறப்படவோ அல்லது வான்வெளியில் பறக்கவோ முடியாது என கூறினார்.
இந்நிலையில், அதன் விமானப் போக்குவரத்துத் துறையை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
அதாவது, பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் அதன் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய தடை விதித்துள்ளது.