ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் இடிந்து விழுந்த 30 வீடுகள்: 5 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் ப்ரைலுகி(Pryluky) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, ஒரு 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 30 வீடுகள் தரைமட்டமானது.
இதில் உயிரிழந்த குழந்தைகளில் 3 குழந்தைகளான அலெக்சாண்டர், கிரிலோ மற்றும் செர்ஹி ஆகிய மூவரும் 1 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் 8 வயதுடைய மேக்சிம் என்ற சிறுவனும் பலியாகி இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ப்ரைலுகி நகரை கிட்டத்தட்ட 5 குரூஸ் ஏவுகணைகள் தாக்கிய நிலையில், இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது ஒரு கீழ்த்தரமான மற்றும் கொடூரமான நடவடிக்கைகளில் ஒன்று என்றும் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.