அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது உறுதி; திட்டத்தை கைவிடமாட்டோம்: ரஷ்யா
பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் திட்டத்தை மாற்றமாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
திட்டம் மாறாது-ரஷ்யா உறுதி
அண்டை நாடான பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த திட்டங்களை மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள் மாற்றாது என்று ரஷ்யா தெளிவாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லையில் உள்ள பெலாரஸில் ஆயுதங்களை வைப்பது குறித்த புட்டினின் அறிவிப்பை அமேரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் கண்டனம் செய்தன. புடினின் இந்த அறிவிப்பு ரஷ்யா மீது புதிதாக மேலும் சில பொருளாதாரத் தடைகளை அறிவிக்க தூண்டியுள்ளது.
PHOTO: ALEXANDER ZEMLIANICHENKO/ASSOCIATED PRESS
இந்த நடவடிக்கை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "இத்தகைய எதிர்வினை நிச்சயமாக ரஷ்ய திட்டங்களை பாதிக்காது" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
புடினின் அறிவிப்பு
சனிக்கிழமையன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது பேசிய புடின், "அணுவாயுத பரவல் தடை குறித்த சர்வதேச ஒப்பந்தங்களை மீறாமல்" தந்திரோபாய அணு ஆயுதங்களை மாஸ்கோ நிறுத்தும் என்று கூறினார். மேலும், இது ஒன்றும் அசாதாரணமான செயல் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
"அமெரிக்கா பல தசாப்தங்களாக இதை செய்து வருகிறது. அவர்கள் நீண்ட காலமாக தந்திரோபாய அணு ஆயுதங்களை தங்கள் நட்பு நாடுகளின் பிரதேசத்தில் வைத்துள்ளனர்" என்று கூறினார்.
Reuters
புடின் தனது பெலாரஷ்ய கூட்டாளியான அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் பேசியதாகவும், அவர்களும் "அப்படியே செய்ய ஒப்புக்கொண்டதாகவும்" கூறினார்.
கடந்த ஒரு வருடமாக உக்ரைனில் அவர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், புடினின் அறிவிப்பு பதற்றநிலையை மேலும் அதிகரித்துள்ளது.