வேறொரு நாட்டிலுள்ள கடற்படைத் தளம்: செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டம்
சிரியாவில் உள்ள தனது கடற்படைத் தளத்தில், வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிரியாவில் கடற்படைத் தளம்
2024ஆம் ஆண்டில் சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த பஷார் அல்-அசாத் பதவியில் அகற்றப்பட்டதன் மூலம், ரஷ்யா மத்திய கிழக்கில் தனக்கு இருந்த மிக நெருக்கமான கூட்டாளியை இழந்தது.
என்றாலும், சிரியாவின் Tartus துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் உள்ளது.
இங்குள்ள இரண்டு கப்பல் நிறுத்தங்களில் ஒன்றில் இந்த வணிக மையமும், மற்றொன்றில் ரஷ்யாவின் இராணுவ இருப்பும் தொடர்ந்து நீடிக்கும் என்று சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஜூலை மாதத்தின் மத்தியில் வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
2,50,000 மெட்ரிக் டன்
இந்த மையமானது, கோதுமை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரஷ்யப் பொருட்களைக் கையாளும் என்றும், ஆரம்பகட்டமாக மாதத்திற்கு சுமார் 2,50,000 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாள்வதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
பொருளாதார வழிகள் மூலம் சிரியாவில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளவும், விரிவுபடுத்தவும் ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகளில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |