உக்ரைன் போரில் ரஷ்யாவின் சதித்திட்டம் அம்பலம்... இலக்கை மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு
உக்ரைன் போரில் உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் சிலவற்றை மட்டும் கைப்பற்றும் இலக்கை ரஷ்யா மாற்றிக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதாவது, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாவதாகக் கூறி, அவர்களை விடுவிப்பதற்காக உக்ரைன் மீது போர் தொடுத்ததாக பிப்ரவரி மாதம் ரஷ்யா கூறியிருந்தது.
போர் துவங்கி ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் முதன்மை இலக்கான தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியவில்லை. ஆகவே, தனது இயலாமையை மறைப்பதற்காக தனது இலக்கு கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதுதான் என கூறிவருகிறது ரஷ்யா.
IMAGE - GETTY IMAGES
இந்நிலையில், வேதாளம் முருங்கை மரம் ஏறினாற்போல் என்று சொல்வார்களே, அதுபோல, உக்ரைனுக்குள் இன்னும் அதிக தூரம் முன்னேற திட்டமிடிருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrov தற்போது கூறியுள்ளார்.
அதற்கு ஏதாவது காரணம் கூறவேண்டுமே!
ஆகவே, உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வழங்கிவருவதாகவும், அதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவேதான் உக்ரைனுக்குள் மேலும் அதிக தூரம் முன்னேற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்றாற்போல் ரஷ்யா தனது போர்த்திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.
ஆனால், கிரீமியாவை ஆக்கிரமித்துக்கொண்டதைப்போலவே, உக்ரைனின் பல பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யா ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செய்தித்தொடர்பாளரான John Kirby தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.