ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கை... 100 சதவீத வரி அச்சுறுத்தலில் சீனாவும் இந்தியாவும்
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றியதை அடுத்து, இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி அச்சுறுத்தல்.
இந்தியா மற்றும் சீனா உட்பட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுமதி வழங்கும் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதிக்கு அதிகாரம்
உக்ரைனின் தீவிர ஆதரவாளராக இருந்து ஜூலை 11 அன்று காலமான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் உக்ரைன் போரைத் தொடங்கியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க வேண்டும் என கிரஹாம் வலுவாக வாதிட்டு வந்தார்.
செனட் சபையில் அவருக்குப் பின் பதவியேற்ற அவரது சகோதரி டார்லின் கிரஹாம், இந்த மசோதா ஜனாதிபதி புடினுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என்று கூறியுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் ப்ளூமெந்தல், உக்ரைன் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த இருகட்சி ஆதரவுடைய மசோதாவானது, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் மீது சுங்கவரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
முதல் ஐந்து நாடுகள்
இந்தியா மற்றும் சீனா தவிர, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளும் தற்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் அடங்கும்.
ஆனால், ரஷ்யாவிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு இந்த மசோதா விதிவிலக்குகளை அளிக்கிறது.

மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், ரஷ்ய நிதி நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய எரிசக்தித் திட்டங்கள் மீதான தடைகளையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி வருவாய் மீதான தற்போதைய அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்காக புடின் நிர்வாகம் பயன்படுத்தும், பழைய மற்றும் பெயர் மாற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல்களை இலக்காகக் கொண்டு, இந்த மசோதா அமெரிக்கத் தடைகளை விரிவுபடுத்தும்.
மேலும், தேசிய நலனுக்கு உகந்தது என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சான்றளித்தால், தடைகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இது வெள்ளை மாளிகையை அனுமதிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |